மதுரையில் அதிமுக கவுன்சிலர்கள் இன்று மாமன்ற கூட்டத்தைப் புறக்கணித்த பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். 
தமிழகம்

மதுரை | ''மதிக்காவிட்டால் ஒட்டுமொத்த ராஜினாமா'' - மாநகர சபை கூட்டத்தை புறக்கணித்து அதிமுகவினர் எச்சரிக்கை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ''எங்களை மதிக்காவிட்டால் மாநகராட்சியை கண்டித்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம்'' என்று இன்று மதுரை மாநகராட்சியில் நடந்த மாநகர சபை கூட்டங்களை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது போன்று தமிழகத்தில் முதல் முறையாக பேரூராட்சி சபை, நகரசபை, மாநகர சபைக் கூட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 பகுதி சபைகள் உருவாக்கப்பட்டு ஆண்டுக்கு 6 முறை நகர சபைக் கூட்டம் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் 10 வார்டு கமிட்டி உறுப்பினர்கள், பகுதி சபா செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று பகுதி சபா செயலாளர்கள், வார்டு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் பகுதி மாநகர சபா கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கூட்டங்களை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அவர்கள், இன்று மாநகர அதிமுக கட்சி அலுவலகத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் சோலைராஜா தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் சோலைராஜா செய்தியாளர்ளிடம் கூறியதாவது: ''உள்ளாட்சி தினமான இன்றைய தினத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை மதுரை மாநகராட்சி நெரித்து உள்ளது. அதிமுக சார்பில் 15 கவுன்சிலர்கள் உள்ளோம். தற்போது மாநகரசபை என்பதை புதிதாக உருவாக்கி அதில் 10 பேர்களை குழுவாக நியமித்திட எங்கள் கவுன்சிலர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பட்டியல் கேட்டனர். நாங்கள் அளித்த பத்து பேர் கொண்ட பட்டியலில் சமுதாய பெரியோர்கள், குடியிருப்பு சங்கங்களை சேர்ந்தவர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று 10 பேர் கொண்ட பட்டியலை கொடுத்தோம்.

ஆனால் நாங்கள் கொடுத்த 10 பேரில் 5 பேர் நீக்கிவிட்டு, அந்த 5 பெயரில் திமுகவை சேர்ந்த வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை இணைத்துள்ளனர். இந்த 5 பேர் கடந்த உள்ளாட்சித் தேர்தல் எங்களுடன் போட்டியிட்டவர்கள், தோல்வியடைந்தவர்கள் இதில் இணைத்துள்ளார்கள். இதில் கட்சியை உள்ளே புகுத்தி ஜனநாயக படுகொலை செய்துவிட்டனர். இவர்கள் எங்களுக்கு எப்படி சபை கூட்டத்தில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். திமுகவில் மதுரை மாநகராட்சியில் 84 பேர் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்கள் வார்டுகளில் அதிமுகவை சேர்ந்த யாருமே அவர்கள் நியமித்தது இல்லை. அது மட்டுமல்ல விதிப்படி கவுன்சில் கூட்டத்தை கூட்டி அந்த 10 பேர் குழுவிற்கு மாநகராட்சி ஒப்புதல் பெற வேண்டும். அப்படி மாநகராட்சி ஒப்புதல் தராமல் நடத்தினால் சட்டத்திற்கு புறமானதாகும், தவறான செயலாகும். அதனால், நாங்கள் கூட்டத்தை புறக்கணித்தோம். நாங்கள் இல்லாமல் இந்த இந்த மாநகர சபை கூட்டத்தை நடத்த முடியாது. அப்படி அவர்கள் நடத்தினால் வழக்கு தொடர்வோம்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் முறையிட உள்ளோம். இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக கவுன்சிலர் பதவியை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம். அதை தவிர வேறு வழியில்லை. இதுவரை 7 முறை மாமன்ற கூட்டங்கள் நடைபெற்று உள்ளது. எந்த வேலையும் நடக்கவில்லை. எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினை சாக்கடை, சாலை, குடிநீர், போன்ற எதையும் தீர்க்கப்படவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT