சென்னை: சென்னையில் புதிதாக தண்ணீர் தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் இணைந்து அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் வடிகால் பணிகள் நடைபெற்றதால் இந்த ஆண்டு மழைநீர் அதிகம் தேங்கவில்லை. நேற்று இரவிலிருந்து மாநகராட்சி சார்பில் 19,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.
மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் மோட்டார்கள் கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. எப்போதும் மழைநீர் தேங்கும் வால்டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை. சென்னையில் புதிதாக தண்ணீர் தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தை போல் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தாழ்வான பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 1 லட்சம் பேர் தங்க வைக்கும் அளவில் முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தேவை என்றால் அவர்களுக்கு தேவையான தரமான உணவு குடிநீர் வழங்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.