தமிழகம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

அ.முன்னடியான்

புதுச்சேரி: மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மழையில் நனைந்தபடி நடந்து சென்று காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதையடுத்து விழா மேடைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றி பேசுகையில், "எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய பல்வேறு திட்டப்பணிகளை நல்ல முறையில் வெகு சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 2020-21-ல் சுமார் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. இது 2021-2022ல் ரூ.37 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

நடப்பு நிதியாண்டியில் சுமார் ரூ.39 ஆயிரம் கோடியாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் வருமானமும் உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் பள்ளிக் கல்வியில் மட்டுமல்லாது உயர்கல்வியிலும் சிறந்து விளங்கி வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டம் 2020-21 மற்றும் 2021-2022 கல்வியாண்டுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.12.61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 276 மருத்துவ மாணவர்கள், 2,400 பொறியியல் மாணவர்கள், 494 செவிலிய மாணவர்கள் பயனடைவர். தற்போது மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு மகளிர் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. 2022-23-ம் கல்வியாண்டு முதல் 240 மாணவர்களுக்கான சேர்க்கை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள 16,769 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையின்போது 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்காக ரூ.26.55 கோடி அரசால் செலவிடப்பட்டு 3.46 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

எனது அரசு பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் நகரப்பகுதிகளில் சுமார் ரூ.20 கோடி செலவில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கும், கிராமப்பகுதிகளில் சுமார் ரூ.9.75 கோடி செலவில் 17.24 கிலோ மீட்டர் தூரத்துக்கும் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஒரு மாபெரும் பணி நியமன இயக்கத்தை எனது அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 1,056 காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பு அந்தந்த துறை சார்பில் நாளை (நவ.2) அன்று வெளியிடப்படும். மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வரும் காலங்களில் தொடரும். அரசு பணியிடங்களை விரைந்து நிரப்ப அறிவுறுத்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது. வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவர சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் எனது அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடலரிப்பின் காரணமாக புதுச்சேரியின் கடலோரக் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. உலகளாவிய பருவ நிலை மாற்றத்தின் விளைவாக, அண்மைக் காலங்களில் கடலரிப்பின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால், மீனவ மக்களின் வாழிடம் மட்டுமல்லாமல், வாழ்வாதாரமும் பாதிக்கும் சூழல் எழுந்துள்ளது.

புதுச்சேரி பகுதிகளுக்கிடையே தமிழகப் பகுதிகளும் இடையிடையே வருவதால் ஒரு பொதுவான தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது. எனவே, வடக்கே மரக்காணம், தெற்கே கடலூர் வரையிலும், காரைக்காலில் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலும் முழுமையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு தேசிய கடலோர ஆய்வு மையத்தை எனது அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடற்கரை சுற்றுச்சூழலைப் பாதிக்காமலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் ஒரு விரிவான கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது. மத்திய புவி அறிவியல் மையம் அளிக்கும் அத்திட்டத்தை புதுச்சேரி அரசு விரைவாக நிறைவேற்றி மீனவர்களின் நலனைப் பாதுகாக்கும். புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இந்நாளில் கேட்டுக்கொள்கிறேன்." என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

இந்த விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, எதிர்கட்சித் தலைவர் சிவா, செல்வகணபதி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT