சென்னை: சென்னை பெரம்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் கடந்த 72 ஆண்டுகளில் 3வது முறையாக நுங்கம்பாக்கத்தில் கனமழை பதிவாகி உள்ளது.
சென்னையில் நேற்று (அக்.31) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதியில் 12 செ.மீ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 10 செ.மீ, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை பகுதியில் 9.8 செ.மீ, அயனாவரம் பகுதியில் 9.4 செ.மீ, நுங்கம்பாக்கம் பகுதியில் 8 செ.மீ, டிஜிபி அலுவலக பகுதியில் 7.2 செ.மீ, எம்ஜிஆர் நகர் பகுதியில் 6.6 செ.மீ, அம்பத்தூர் பகுதியில் 5.2 செ.மீ, அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 4.6 செ.மீ, ஆலந்தூர் பகுதியில் 3 செ.மீ, சோழிங்கநல்லூர் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக கடந்த 72 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கனமழை பதிவாவது ( 8 செ. மீ ) இது மூன்றாவது முறை ஆகும் .