சென்னை: ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யா கொலை தொடர்பாக, அவரது தோழிகளிடம் சிபிசிஐடி போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தை குற்றப்பத்திரிகையில் இணைக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்யா(20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவரால், கடந்த மாதம் 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சதீஷைக் கைது செய்த ரயில்வே போலீஸார், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முதல்கட்டமாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், சத்யா தள்ளிவிடப்பட்ட ரயில் ஓட்டுநர், நேரில் பார்த்தவர்கள், மாணவிசத்யாவின் குடும்பத்தினர் என அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சத்யா கொலையை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம், அவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலீஸார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், கொலையைநேரில் பார்த்ததாகக் கூறப்படும் சத்யாவின் தோழிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த விவரங்கள் அனைத்தையும் குற்றப்பத்திரிகையில் இணைக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். அடுத்தகட்டமாக மாணவியின் பெற்றோரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.