புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல்ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அபராத கட்டணம் தொடர்பான விவரத்தை போக்குவரத்து துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே வைத்துள்ளனர்.
மேலும் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக 2019 முதல் 2021 வரை புதுச்சேரியில் 3,410சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை மட்டும் 181 பேர் இறந்துள்ளனர். ஹெல்மெட் அணியாததே இதற்கு முக்கிய காரணமாகும். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி தலைமையில் போக்குவரத்து துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விதிகளை கடைபிடித்தல், ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதித்து, சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீஸார் பள்ளிகள், முக்கிய இடங்களில் பொதுமக்களை ஒன்று திரட்டிஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வருகின்றனர்.
இந்நிலையில், ‘இன்று (நவ.1) முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவோர், பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’ என கடந்த 29-ம் தேதி போக்குவரத்து (கிழக்கு-வடக்கு) எஸ்பி மாறன் அறிவிப்பு வெளியிட்டார். இதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இன்று முதல் ஹெல்மெட் சட்டம் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக பாரதி பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் உட்பட நகரின் பல இடங்களில் போக்குவரத்து துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.ஹெல்மெட் இன்றி பயணித்தால் அபராதம் ரூ.1,000 மற்றும் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சிறுவர்கள் பைக் ஓட்டுதல், சிக்னல் விதிகளை மீறுதல், அபாயகரமான முறையில் பைக் ஓட்டுதலில் ஈடுபடுவோருக்கான முதல் குற்றம் மற்றும் இரண்டாம் குற்றத்துக்கான தண்டனை விபரமும் அடங்கிய பேனர்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணித்தல், வாகன காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குதல், பர்மிட் விதிகள் மீறல்உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல் மற்ற காவல் நிலைய போக்குவரத்து போலீஸாரும் வீதி வீதியாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பை அறிவித்துச் சென்றனர். இது தொடர்பாக கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். நகர் பகுதிக்குள் 30 கி.மீ வேகத்திற்குள்ளேயே சாலையை கடக்க வேண்டியது உள்ளது. இந்த இடத்தில் ஹெல்மெட் அணிய வற்புறுத்துவது தேவையற்ற என்ற விமர்சனங்களும், எதிர்ப்புகளும் பல்வேறு தரப்பில் கிளம்பியுள்ளது.