ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நகைகளின் எடை குறைந்தது தொடர்பாக ஏற்கெனவே பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அபராதம் செலுத்துமாறு கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நகைகள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவை கோயில் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆபரணங்கள், கோயிலில் நடைபெறும் முக்கியமான விழாக்களின்போது சுவாமி, அம்பாளுக்கு அணிவிக்கப்படும்.
இக்கோயிலில் நகைகளை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1978-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பின் 2019-ல் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் சரிபார்க் கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டன. இந்நிலையில், நகைகளில் எடை குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அது தொடர்பாக அபராதம் செலுத்துமாறு கடந்த 41 ஆண்டு களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும், தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கும் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரின் முழுப்பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நகைகளில் எடைக் குறைவு ஏற்பட்டதற்கு தாங்கள் மட்டுமே காரணம் என்று கூறி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியதற்கு ஊழியர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.