ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர் மர்மமான முறையில் விடுதி அறையில் இறந்து கிடந்தார்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். பி.எஸ்.என்.எல். ஊழியர். இவரது மகன் சிவசுடலை மூர்த்தி(19). சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கல்லூரிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று விட்டனர். சிவசுடலை உட்பட ஒரு சில மாணவர்கள் மட்டும் ஊருக்கு செல்லாமல் விடுதியில் தங்கி இருந்தனர்.
வியாழக்கிழமை காலையில் 10 மணி கடந்த பின்னரும் சிவசுடலை அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து அறை மாணவர்கள் அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது அங்கிருந்த படுக்கையில் சிவ சுடலை பிணமாக கிடந்தார். முந்தைய நாள் இரவு 2 மணி வரை சிவசுடலை படித்துக்கொண்டு இருந்ததை சக மாணவர்கள் பார்த்துள்ளனர். அப்படி இருக்கையில் மறுநாள் அவர் பிணமாக கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து ஸ்டான்லி கல்லூரி போலீஸார் நடத்திய விசாரணையில், சிவசுடலைக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதும் தெரிந்தது. சிவசுடலை இறப்பதற்கு முந்தைய நாள் இரவில் நீண்ட நேரம் வரை விழித்திருந்து படித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட அதிக அழுத்தத்தில் மூளையின் நரம்புகள் வெடித்து ரத்த கசிவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்.