தமிழகம்

திமுக போராட்டத்துக்கு எதிராக கறுப்புப் பண ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தமிழிசை வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை நடத்தும் போராட்டத்தை முறியடிக்க கறுப்புப் பண ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு பாஜகவினருக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டின் எதிர்கால நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இதனைப் பொறுக்காத எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.

நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அரசியலாக்குகின்றனர். இந்த காலகட்டத்தில் சூழ்நிலையை எப்படி இயல்பாக கையாள வேண்டும் என மக்களுக்கு உணர்த்துவதே ஆரோக்கியமானதாக இருக்கும். மாறாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது.

திங்கள்கிழமை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தை முறியடிக்க கறுப்புப் பண ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும்.

பணமில்லா பரிவர்த்தனை, செல்போன்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்லது ஆகியவற்றை சாமானிய மக்களிடம் கொண்டுச் செல்ல பயற்சி முகாம்களை நடத்த வேண்டும்.

வணிகர்கள், விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் சிரமங்களைக் குறைக்க சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய உள்ளது. நபார்டு வங்கியின் பணப்பரிவர்த்தனைக்கு ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்கக் கூடாது'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT