புதுடெல்லி: சூரிய சக்தி பம்ப்செட் அமைத்த காஞ்சிபுரம் விவசாயிக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அப்போது, சூரிய சக்தியால் நாட்டுக்கு அதிக நன்மை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சூரிய சக்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சூரிய சக்தியை நாம் அதிக அளவில் பயன்படுத்துகிறோம். தற்போது மிகப் பெரிய அளவில் சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளோம். சூரிய சக்தி மூலம் அதிகம் பணத்தை சேமிக்க முடியும் என்பதை பலரும் நிரூபித்து வருகின்றனர். தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்த எழிலன் என்ற விவசாயி, பிரதமரின் ‘குஷும் யோஜனா’ திட்டத்தின் பயனை அடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரைத் திறன் கொண்ட சோலார் பம்ப்செட்டை அமைத்துள்ளார். இதன்மூலம் அவரது பண்ணையில் பாசனத்துக்கு என தனியே செலவு செய்வது கிடையாது.
வேளாண் நிலத்தில் பாசனம் செய்ய, அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை. அவருக்கு, மின்கட்டண செலவே கிடையாது. இவரைப் போன்ற விவசாயிகள் பாராட்டுக்குரியவர்கள். இதேபோல, சூரிய சக்தி மூலம் பலரும் பயனடைந்துள்ளனர். குஜராத்தின் மோதிரா பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சூரிய எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல, டிஜிட்டல் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறு மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.