சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டி, ராஜ் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

தேவரின் கொள்கைகள் நம்மை ஊக்குவிக்கும்: பிரதமர், ஆளுநர், முதல்வர் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜை நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம், சிலை உள்ள

பகுதிகளில் தமிழக அரசு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதுகுறித்து ட்விட்டரில் தலைவர்கள் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்துக்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு பார்வை கொண்ட தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை பயணம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கத்தை அளிக்கும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர். "தென்னகத்து போஸ்" பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதேபோன்று பாமக நிறுவனர் ராமதாஸும் ட்விட்டரில் பசும்பொன் தேவர் குறித்து நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பாலு எம்.பி., மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த
உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்
பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள்.

அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதேபோன்று, பாஜக, காங்கிரஸ், அமமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT