படங்கள்: எல்.பாலச்சந்தர் 
தமிழகம்

பசும்பொன்னில் 115-வது ஜெயந்தி விழா | தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

கமுதி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு தேவர் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து காலை 9 மணிக்கு அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, அன்பில் மகேஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் நவாஸ்கனி எம்.பி.,எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கருமாணிக்கம், தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்.பி. தர்மர், எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக சார்பில் மாநிலதலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

வி.கே.சசிகலா, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். நேற்று மாலை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று, காங்கிரஸ் நிர்வாகிகள், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் சேதுராமன், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், முன்னாள் எம்எல்ஏக்கள் தனியரசு, நடிகர் கருணாஸ் உள்ளிட்ட பலர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT