காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேல் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மற்றும் வட தமிழகத்தில் வானிலை இயல்பாக இருக்கும். அதேவேளையில் தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளது.
*
விரிவாகச் சொல்ல வேண்டுமானால், சென்னையை நோக்கி நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது மேல் நோக்கி நகர்வதால் அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கடல் காற்றின் தாக்கம் குறைவாகவே இருக்கும். சென்னை நகரம் அமைந்துள்ள அட்சரேகையின் வடக்கே மையம் கொண்டுள்ள ஒரு காற்றுவெளியானது தரைக்காற்றை மட்டுமே வலுப்படுத்தும்.
எனவே, சென்னையைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வானம் தெளிவாகவே இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். அதுகூட பெய்யாமல் இருக்கலாம்.
இந்திய கடலோர பகுதியில் எப்போதெல்லாம் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தென் தமிழகத்திலும், தெற்கு கேரளாவிலும் மழை பெய்கிறது.
தற்போது, ஆந்திர கடலோர பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத்தால் தென் தமிழகத்த்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஓரளவு நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும்.