தமிழகம்

பாரதியார் விருதுக்கு வைஜயந்திமாலா பாலி தேர்வு: டிசம்பர் 11-ம் தேதி வழங்கப்படுகிறது

செய்திப்பிரிவு

இந்த ஆண்டுக்கான பாரதியார் விருதுக்கு பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான வைஜயந்திமாலா பாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என வானவில் பண்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி, பாஜக எம்பி இல.கணேசன், புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாகவி பாரதியின் நல்லுணர்வும், நற்சிந்தனைகளும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் பரவ செய்வதற்காக வானவில் பண்பாட்டு மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 1994-ம் ஆண்டில் இருந்து பாரதியின் பிறந்தநாளை எங்கள் மையம் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா டிசம்பர் 10, 11-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதன்படி, டிசம்பர் 10-ம் தேதி மாலை திருவல்லிக்கேணி என்கேடி தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மறைந்த எம்.பி.சீனிவாசின் சென்னை இளைஞர் குழுவினரின் சேர்ந்திசை நிகழ்ச்சி, ‘வாழ்விக்க வந்தவர்கள்’ என்ற தலைப்பில் சுகி சிவத்தின் சொற் பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மறுநாள் 11-ம் தேதி அதே பள்ளி வளாகத்தில் பிரபல இசைக்கலைஞர்கள் அருணா சாய்ராம், ஓ.எஸ்.அருண், உன்னி கிருஷ்ணன், டி.எம்.கிருஷ்ணா, மஹதி, சங்கீதா சிவக்குமார் ஆகியோர் 200-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பாரதி பாடல்களை ‘பாரதி ஐந்து’ என்ற பஞ்சரத்னக் கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து ஜதிபல்லக்கு ஊர்வலம் என்கேடி பள்ளியில் தொடங்கி பாரதி நினைவு இல்லம் சென்றடையும்.

இந்த ஆண்டுக்கான பாரதி விருதுக்கு பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான வைஜயந்திமாலா பாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாரதி பிறந்த தினமான டிசம்பர் 11-ம் தேதி கவிப்பேரரசு வைரமுத்து விருது வழங்கி பாராட்டுரை வழங்குவார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இச்சந்திப்பின் போது பரதக் கலைஞர் ஷோபனா ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT