மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருபவர்கள் சுரேந்திரன், ராஜதுரை, கனீஷ்க். இதில் கனீஷ்க் சென்னையைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் கோவையை சேர்ந்தவர்கள். இவர்கள் உட்பட 10 மாணவர்கள் நேற்று மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர். மாம்பட்டி என்ற இடத்துக்குச் சென்ற மாணவர்கள் பவானி ஆற்றில் இறங்கி குளித்தனர்.
ஆற்றின் மறுகரைக்கு செல்ல முயன்றபோது நீரின் வேகம் அதிகரித்ததால், சுரேந்திரன், ராஜதுரை, கனீஷ்க் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து பரிசல்கள் உதவியோடு மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றின் ஆழமான பகுதிகளில் கயிறுகளில் இரும்பு கொக்கிகளை வீசியும் தேடி வருகின்றனர். ஆற்றின் மறுகரையில் சிக்கிய மீதமுள்ள ஏழு மாணவர்களை பரிசல்கள் மூலம் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். மாலை நேரத்தில் இருட்டியதாலும், லேசான மழை தூறல் இருந்ததாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று தேடும் பணி நடைபெற உள்ளது.