அ.ஈச்சம்பாடியில் 35 வருடங்களாக வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மக்கள். 
தமிழகம்

அரூர் அருகே வீட்டுமனை பட்டா கோரி 35 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்

செய்திப்பிரிவு

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கே.வேட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அ.ஈச்சம்பாடி சந்தை பகுதி. இங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 15 குடும்பத்தினர் 35 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சவுரி பின்னும் தொழில் செய்து வருகின்றனர்.

வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டும் இன்று வரை நடவடிக்கை இல்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கோரி அளித்த மனுவின் அடிப்படையில் பட்டா வழங்க அரூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் இரு முறை ஈச்சம்பாடிக்கு வந்து நிலம் அளவீடு செய்தனர். ஆனால் இன்றுவரை பட்டா வழங்கவில்லை.

ஊராட்சி நிர்வாகத்திடம் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் இணைப்பு வேண்டுமென மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்களிடம் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளது. வீட்டு வரியும் கட்டி வருகிறோம். வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் ஆதார் கார்டு ,ரேஷன் கார்டு ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்போம், என்றனர்.

SCROLL FOR NEXT