நாகர்கோவில்: களியக்காவிளை அருகே கேரள மாநிலம் செங்கல் பகுதியில் மகேஸ்வரன் -சிவபார்வதி கோயில் அமைந்துள்ளது. கேரள மாநில சிற்பக் கலை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் கருவறையில் சிவன், பார்வதி அருட் காட்சி தருகின்றனர். கருவறையின் அருகில் கணபதி, முருகன் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருவறையை சுற்றிலும் 12 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயில் கன்னி மூலையில் கணபதி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விநாயகரின் 32 பாவனைகளை குறிக்கும் வகையில் 32 கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த கோயில் வளாகத்தில் வாயு மூலையில் 111 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் உட்பகுதி எட்டு நிலைகளாகவும், ஒவ்வொரு நிலையிலும் பக்தர்கள் உட்கார்ந்து ஓம் நமசிவாய என்ற நாமம் உச்சரிப்பதற்கான வசதியும் கொண்டுள்ளது .
முதல் தளத்தில் அமைக்கப் பட்டுள்ள சிவலிங்கத்துக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து தீர்த்தம் எடுக்கலாம். ஏழு நிலைகளையும் கடந்து சென்றால் எட்டாவது நிலையில் சிவன்-பார்வதி தரிசனம் கிடைக்கிறது.
இந்த மகா சிவலிங்கம் ஏற்கெனவே இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ், லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் விருதை பெற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வேர்ல்டு ரிகார்ட்ஸ் யூனியன் (யு.எஸ்.ஏ) என்ற அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் செங்கல் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கையை வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் யூனியனுக்கு சமர்ப்பித்தனர்.
இதை தொடர்ந்து தற்போது அந்த அமைப்பின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் உலக சாதனை விருதை சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதியிடம் வழங்கினார்.