முதல் படம்: உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட படம் | இரண்டாம் படம்: சேதமடைந்த நிலையில் காணப்படும் ஸ்ட்ரெச்சர் 
தமிழகம்

புதுச்சேரியில் சிறுவனை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற அரசு ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கெனவே புகார் தெரிவித்தும் அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு சனிக்கிழமைதோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அந்த ரயில் ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் கொல்கத்தாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். அந்த ரயில் புதுச்சேரி அருகே வந்தபோது, அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர். இதற்கிடையே அந்த ரயில் புதுச்சேரி ரயில்நிலையத்தை அடைந்ததும் ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள், சிறுவனை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்தது. ஆனால் அந்த ஆம்புலன்சில் உள்ள ஸ்ட்ரெச்சர் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை நடைமேடைக்கு இழுத்து செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் அங்கிருந்த பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து தள்ளிக் கொண்டு ரயில் நிலையம் வெளியே இருந்த ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பொதுவாக ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை, ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி சுகாதார நிலையத்திற்குச் சொந்தமான ஆம்புலன்சில் எந்த ஒரு வசதியும் கிடையாது. இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் கூறுகையில், 'ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரெச்சர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவசர நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு ஆகும். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். புதுச்சேரியில், புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என நான்கு பிராந்தியங்களிலும் 15 வாகனங்கள் இயக்கப்பட்டன. அதில் 2 வண்டிகள் பழுதானதைத் தொடர்ந்து தற்போது 13 வாகனங்கள் மட்டுமே ஓடுகின்றன.

2011ம் ஆண்டு வாங்கப்பட்ட வாகனங்கள் தான் தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. 11 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த வாகனங்கள் மோசமான நிலையில் உள்ளன. அடிக்கடி பஞ்சர் ஆகும் டயர், உடைந்து போன ஸ்டெச்சர், ஆக்சிஜன் வசதி இல்லை, முறையான பராமரிப்பு கிடையாது என ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகள் ஏராளம். காரைக்காலில் 5 ஆம்புலன்ஸ்களும் புதுச்சேரியில் கோரிமேடு, காலாப்பட்டு, காட்டேரிக்குப்பம், அரியூர், நெட்டப்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், தவளக்குப்பம் என 8 கொம்யூன்களிலும் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதன் ஓட்டுனர்களுக்கு 12 ஆண்டுகளாக 9 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பள உயர்வு இல்லை, பணி நிரந்தரம் இல்லை, தீபாவளி போனஸ் இல்லை என்பது ஓட்டுனர்களின் குற்றச்சாட்டு. விபத்தில் சிக்கியவர்களை எடுத்துவரும் ஆம்புலன்களில் ஸ்டெச்சர் முழுமையாக சேதமடைந்து விட்டதால் அவசர நோயாளிகள் பெட்ஷீட், கைலி, வேஷ்டி, சேலை போன்றவற்றின் மூலம் தூக்கி வரக்கூடிய அவலம் புதுச்சேரியில் காணப்படுகிறது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT