வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு மற்றும் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில், ''பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர் தடுப்பு விதிகள் 2016 வரவேற்கக் கூடிய வகையில் உள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், சட்ட விதிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பிறமனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள், பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனடிப்படையில் இந்த திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் ஆணவ கொலைகள், சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சட்ட விதிகளை வலுபடுத்த வேண்டியது அவசியமாகும். சரியான புள்ளி விபரங்களை நடுநிலையோடு பார்ப்பதற்கு மாறாக சட்டம் தவறாக பயன்படுத்தபடும் என பொதுவாக கூறப்படும் கருத்து குற்றத்தை செய்பவர்கள் தப்பிப்பதற்கு வழிவகுத்துவிடும்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் உரிமைகளை நிலை நாட்டிடவும் அதிகரித்துவரும் வன்கொடுமைகளை தடுத்திடவும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும், சமுக ஆர்வலர்களும் முழுமையாக வரவேற்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.