கோவையில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி | கோப்புப் படம் 
தமிழகம்

கோவை சம்பவம் | “புலன் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சி” - தமிழக காவல் துறை

செய்திப்பிரிவு

சென்னை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திசை திருப்ப முயற்சிக்கிறார்” என்று தமிழக காவல் துறை சாடியுள்ளது.

இது குறித்து தமிழக காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காவல் துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு.

எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, மத்திய அரசுக்கு முறையாக அறிக்கை அனுப்பி, அதன்பிறகு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழக முதல்வர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை என்ஐஏ விசாரிக்க பரிந்துரை செய்தார்.

இதற்கு முன்னால் நிகழ்ந்த இதுபோன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துக் கூட வழக்குகள் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவும் சில வழக்குகளில், ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது.

மாநில அரசாங்கங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில், குண்டு வெடிப்பு நடக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும், காவல் துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். ஆனால், கோவை மாநகரைப் பற்றி எந்த தகவலும் சுற்றறிக்கையில் இல்லை. இது போன்ற உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும்பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்" என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கோவை சம்பவத்தில் அடிமட்டத்தில் இருக்கக் கூடிய காவல் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து உடனடியாக குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடித்துள்ளனர், சோதனை நடத்தியுள்ளனர், வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர். ஆனால், முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் 4 நாட்களாக ஏன் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

கோவை காவல் ஆணையர் கடந்த 18-ம் தேதி எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் வரவில்லை என்று கூறினார். ஆனால், மத்திய உள்துறை 18-ம் தேதி மதியம், தமிழக அரசுக்கு தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆனால், தமிழக காவல் துறை 18, 19 மற்றும் 20-ம் தேதி ஆகிய 3 நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 21-ம் தேதி மாலை மாநிலத்தின் உளவுத் துறை, மத்திய அரசு கொடுத்த அறிக்கையை எடுத்து, அதற்கு மேல் சில விஷயங்களை எழுதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்" என்று தெரிவித்து இருந்தார்.

SCROLL FOR NEXT