மதுரை: முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணி மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்க மறுத்து வருகிறது என உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன், முல்லைப் பெரியாறு அணையில் மேலும் இரு சுரங்கப்பாதை அமைத்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக பொதுப் பணித்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. இதனால் முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் 1994-ல் முடிந்ததும், அணையின் நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
அணையில் கூடுதல் சுரங்கப்பாதை அமைத்தால் அணையின் கொள்ளளவை 152 அடிக்கு உயர்த்த முடியாது. அணையை பலப்படுத்தி 152 அடிக்கு தண்ணீர் தேக்குவதே தமிழக அரசின் நோக்கமாகும். முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தவும், கொள்ளளவை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கேரள அரசு ஒத்துழைக்க மறுத்து வருகிறது. கேரள வனத்துறை அனுமதிக்காததால் அணையை மேலும் பலப்படுத்தும் பணியை தொடங்க முடியவில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்". இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, மனுதாரருக்கு பதில் மனுவின் நகல் வழங்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 3-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.