கோவை: கோவையில் ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறையில் கார் வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டதையும், சங்கமேஸ்வரர் உட்பட 3 கோயில்களை மையப்படுத்தி ஒத்திகை நடத்தியதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்குப்பதிந்து, முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28) ஆகியோரை கைது செய்தனர். உபா ( சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்), கூட்டுசதி, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அப்சர்கானை தவிர, மீதமுள்ள 5 பேரை காவலில் எடுத்தும் போலீஸார் விசாரித்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)-க்கு மாற்றம் செய்யப்பட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒத்திகை நிகழ்வு : இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றன. அதாவது, கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜமேஷா முபின் தன் நெருங்கிய உறவினரான அப்சர்கான், முகமது அசாருதீன் ஆகியோருடன் ஓரிரு முறை ஒத்திகை பயிற்சி நடத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் கோட்டைமேட்டில் இருந்து கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில், புலியங்குளம் விநாயகர் கோயில் ஆகியவற்றுக்கு சென்று ஒத்திகை பார்த்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஆனால், அதை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர். மேற்கண்ட கோயில்கள் மூன்றும் பழமையானதும், மக்கள் அதிகம் வரக்கூடிய கோயில்களாகும். இங்கு எந்த நேரத்தில் பக்தர்கள் கூட்டம் இருக்கும், வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை எங்கு நிறுத்தலாம் என்பது போன்றவற்றை இவர்கள் கண்காணித்திருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், கோயில்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் எனவும், இதன் பின்னணியில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
பெரும் சேதம் ஏற்படுத்த திட்டம்: வெடிப்பு நிகழ்ந்த இடம் மற்றும் முபினின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்த போது, சிலிண்டர், வெடிபொருள், ஆணி, கோலி குண்டு ஆகியவற்றை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை விளைவிக்க முபின் திட்டமிட்டிருந்ததையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாகவும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ என்ற முறையில் இந்த கார் வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை என்றால் தீவிரவாத சிந்தனை உடையவர்்கள், தனிப்பட்ட முறையில் தாக்குல் மேற்கொள்வதே ஒற்றை ஓநாய் முறை ஆகும். இந்த வகை தாக்குதல்களை நடத்த முபின் பிரத்யேக பயிற்சிகள் பெற்றிருக்கலாம் எனவும் தெரிகிறது. எனவே, அவரது பின்னணியில் யார் உள்ளார் என்பதை கண்டறியும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, காந்திபார்க், பழைய மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காஸ் சிலிண்டர் மற்றும் 3 டிரம்களை கைதானவர்கள் வாங்கியிருப்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான தகவல்களையும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.