தொழிலதிபர்கள் பலர், கறுப்புப் பணத்தை தங்கள் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த பலரும் நகைக்கடைகளுக்கு சென்று தங்கக் கட்டிகளையும், நகைகளையும் வாங்கிக் குவித்தனர். இதைத் தொடர்ந்து தங்கம் வாங்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இருப்பினும் கறுப்புப் பணத்தை பலரும் தங்க நகையில் முதலீடு செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக சில நகை வியாபாரிகள் செயல்பட்டதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, சண்டீகர், லூதியானா, ஜலந்தர் உட்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 11-ம் தேதி சென்னையில் உள்ள நகைக்கடைகள், ஏஜென்ட்கள் வீடு களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சில தனியார் நிறுவன முதலாளிகள் தங்கள் தொழிலாளர்கள் பெயரில் கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து, நல்ல பணமாக மாற்ற முயன்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, சென்னையின் வர்த்தக பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வகையில், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியைத் தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்களது வீடு மற்றும் நிறுவனங்கள், அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எந்தெந்த தொழி லாளர்களின் கணக்கில் திடீரென பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திடீர் சோதனை
இதேபோல வருமானத்துக்கு அதிக மாக சொத்துகளை குவித்து வைத் திருப்பவர்களின் தகவலை லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் சேகரித்து வருகின்றனர். அவர்களும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.