தென்காசி: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் பிரதமர் கிஸான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரிகிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இணையும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்த தொகையானது 4 மாதங்களுக்கு ஒருமுறை, நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் பிஎம் கிஸான் திட்டத்தில் பயன்பெற புதிய விண்ணப்பங்களை பதிவுசெய்ய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து செங்கோட்டை வட்டம் இலத்தூரைச் சேர்ந்த மதிமுக தொழிற்சங்க நிர்வாகி முருகன் ‘இந்து தமிழ் திசை' உங்கள்குரல் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் பி.எம். கிசான் திட்ட இணையதளத்தில் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. புதிதாக நிலம் வாங்கிய மற்றும்பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்காத விவசாயிகள் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க முடியவில்லை. தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த பிரச்சினை இன்னும் சரி செய்யப்படவில்லை என்றார்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறும்போது, “பிஎம் கிஸான் திட்டத்தில் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது, விவசாயியின் மாவட்டத்தின் பெயரை இணையதளத்தில் தேர்வு செய்ய வேண்டும்.ஆனால் தென்காசி மாவட்டம்பெயர் இணையதளத்தில் இன்னும் சேர்க்கப்படவில்லை. தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களும் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுவிட்டால் அதன் பின்னர் விண்ணப்பங்களை பதிவு செய்துவிடலாம்” என்றனர்.