சீனாவில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்து காற்றாலை இறகுகளை இறக்கும் பணி நடைபெற்றது. 
தமிழகம்

ஒரே கப்பலில் அதிக காற்றாலை இறகுகள் இறக்குமதி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ஒரே கப்பலில் இருந்து அதிக காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. ஒரே கப்பலில் 60 காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்தது முந்தைய சாதனையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி சீனாவில் இருந்து நான்பெங்க் ஷிசிங் என்ற சரக்கு கப்பல் 76.8 மீட்டர் நீளம் கொண்ட 120 காற்றாலை இறகுகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த காற்றாலை இறகுகள் பாதுகாப்பான பெரிய நகரும் பளுதூக்கிகள் மூலம் கையாளப்பட்டன. இதனால் 44 மணி நேரத்தில் அனைத்து காற்றாலை இறகுகளும் இறக்குமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும் வஉசி துறைமுகம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் இறக்குமதியில் சாதனைகளை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் 2,906 காற்றாலை இறகுகளையும், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரை 1,598 காற்றாலை இறகுகளையும் கையாண்டுள்ளது. துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் உதிரிபாகங்களை சேமித்து வைப்பதற்கு தேவையான இடவசதியும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதால் எளிதான முறையில் நீண்ட காற்றாலை இறகுகளை எடுத்துச் செல்லும் பிரத்யேக லாரிகள் எளிதாக துறைமுகத்தின் உள்ளே வந்து செல்கிறது. வஉசி துறைமுகத்தால் வழங்கப்படும் சிறப்பான சேவை நம் நாட்டின் சுற்றுபுறச்சூழலின் மேன்மைக்கும், புதுப்பிக்கப்பட்ட மின்சாரம் தயாரிக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT