தமிழகம்

இளவரசன் மரணம் குறித்த விசாரணை: சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தர்மபுரி இளவரசன் மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனும், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனால் மன வேதனை அடைந்த திவ்யாவின் அப்பா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த பிரச்சினை சாதிக் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என திவ்யா கூறினார். அதற்கு அடுத்த நாள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி்க்குப் பின்புறம் உள்ள ரயில் தண்ட வாளத்தில் இளவரசன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இளவரசனின் மர்ம மரணம் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக் கோரி இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தார்.

ஏற்கெனவே இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இளங்கோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு, வழக்கறிஞர் எஸ்.ரஜினிகாந்த் ஆகியோர், “இளவரசனின் மறுபிரேத பரிசோதனையில் 2 டாக்டர்கள் 2 விதமான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும்’’ என கோரினர். அதையடுத்து நீதிபதிகள், இள வரசனின் மர்ம மரணம் தொடர் பான விசாரணையை ஏன் சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு மாற்றக் கூடாது? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தர விட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் டிஎஸ்பி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இளவரசன் காதல் தோல்வியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மதுபோதையில் ரயிலில் அடிபட்டு தற்கொலைதான் செய்துள்ளார் என கூறியுள்ளார். அதில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. ஆனால் இளவரசனின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மற்றும் சென்னை மருத்துவர்கள் இருவேறு விதமான அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். அவர்கள் வழக்கை விசாரித்து வரும் பிப்ரவரி 17-ம் தேதிக்குள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT