தமிழகத்துக்கு திமுக ஆட்சியில் 66 ஆயிரம் கோடி முதலீடு வந்ததாக சொன்னதை நிரூபிக்கத் தயாரா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் வியாழக் கிழமை தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு கடந்த கால மத்திய அரசின் தவறான பொரு ளாதார கொள்கையே காரணம். அதில் திமுகவின் பங்கும் உண்டு. இந்தியாவின் பொருளாதார வளர்ச் சிக்கு மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள திமுகவும் பெரும் பங்காற்றி உள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியா னால், வீழ்ச்சிக்கும் திமுகதான் காரணம் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அந்நிய முதலீடு களை ஈர்த்து தொழில் வளத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக ஃபோர்டு, ஹூண்டாய், செயின்ட் கோபைன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க திட்டங்களை வகுத்தவர் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.31,706 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஒற்றைச்சாளர முறையில் 35 திட்டங்களையும் சேர்த்து மொத்தம் 68 திட்டங்களில் தமிழகம் ஈர்த்த மொத்த முதலீடு 46,602 கோடி. இதன்மூலம் சுமார் 1,62,667 பேருக்கு நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பை முதல்வர் உருவாக்கியுள்ளார்.
உற்பத்தித் துறையில் மொத்த வளர்ச்சி விகிதம் பற்றிய அறிக்கையை அண்மையில் மத்திய திட்டக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழகம் எட்டியுள்ள வளர்ச்சி விகிதம் 6.13 சதவீதம். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.74 சதவீதம் ஆகும்.
வெளிமாநிலத்தவர் தமிழகத்தில் அதிகமாக வேலை செய்வதாக தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன் கூறியிருந்தார். ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற பெரிய கம்பெனிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 90 சதவீதமும், மற்ற மாநிலத்தவர் 10 சதவீதமும்தான் உள்ளனர்.
நிர்வாகத் திறமையும், வெளிப்படையான கொள்கையும், சட்டத்தின் ஆட்சியும் நடப்பதன் காரணமாக ஜப்பான் முதலீட்டாளர் கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். தற்போது ஜப்பான் நாட்டின் 523 கம்பெனிகள், தமிழகத் தில் தொழில் தொடங்கியுள்ளன. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் ஜப்பான் நிறுவனங் களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
நிரூபிக்க தயாரா?
திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு வந்த மொத்த தொழில் முதலீடு ரூ.21 ஆயிரம் கோடிதான். ஆனால், ரூ.66 ஆயிரம் கோடி கொண்டு வந்ததாக உறுப்பினர் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் ஆதாரத்தோடு புள்ளி விவரங்களை தரத் தயாராக இருக்கிறேன். அவர் சொல்லியதை இங்கு நிரூபிக்க முடியுமா?
இந்தியாவிலேயே அதிக அளவாக ஆண்டுக்கு 13 லட்சத்து 80 ஆயிரம் கார்கள் தமிழகத்தில் உற்பத்தியாகின்றன. மின்னணு வன்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவில் முதலிடத்தையும், மென்பொருள் ஏற்றுமதி மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் இரண்டாம் இடத்தையும் தமிழகம் வகிக்கிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.