பாலகிருஷ்ணன் | கோப்புப் படம் 
தமிழகம்

போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை 400% முதல் 1900% வரை உயர்த்தியது சரியல்ல: மார்க்சிஸ்ட் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: மிகக் கடுமையாக உயர்த்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அனைத்து விதமான விதிமீறல்களுக்கும் அபராதமாக ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை 400% முதல் 1900% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு ரூ.100 என இருந்தது ரூ.1000‌‌ எனவும், காரில் சீட்பெல்ட் அணியாமல் செல்வோருக்கு 100 ரூபாயிலிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது.

போக்குவரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை விரிவாக மேற்கொள்வதுடன், கூடுதலான தன்னார்வலர்களை இப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டுமெனவும், அதேபோல தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விபத்து மற்றும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்க‌வும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே, மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT