அண்ணாமலை, செந்தில்பாலாஜி | கோப்புப் படம் 
தமிழகம்

“அரசின் இயலாமையை வெளிப்படுத்துகிறார் செந்தில்பாலாஜி” - அண்ணாமலை பதில்

செய்திப்பிரிவு

சென்னை: “அரசின் இயலாமையை வெளிப்படுத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகுவாரா?” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "கோவை சம்பவம் மக்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. அதன் தலைவர் உண்மைத் தன்மை தெரியாமல் பேசி வருகிறார். காவல் துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு இந்தத் தகவல்கள் எப்படி கிடைத்தது, எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்.ஐ.ஏ முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”திமுக அரசின் அமைச்சர் "அரசுக்குத் தெரியாதது அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களும் அரசு இயந்திரமும் எதை நோக்கி நகர்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. அரசின் இயலாமையை வெளிப்படுத்தும் அமைச்சர் சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகுவாரா?" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT