கடலூர்: "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும். கடவுள் நம்பிக்கையை மறுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அதற்கு தமிழை மறுக்க வேண்டும். தமிழை இல்லை என்ற நிலைக்கு உள்ளாக்க வேண்டும். அதற்கு ஆங்கிலத்தை கொண்டுவரவேண்டும். இதை திமுக தனது ஆரம்பகால அரசியலில் மிகத் தெளிவாக செய்து ஆங்கிலத்தை புகுந்த ஆரம்பித்தார்கள்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடலூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியது: "ஈ.வெ.ராமசாமி நாயக்கர் 1965-ல் சொன்னதைப் பாருங்கள்... ‘இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடந்த காலித்தனம், ஆரம்பத்திலேயே 4 காலிகளை சுட்டிருந்தால், இத்தனை நாசவேலைகளும், இத்தனை உயிர்ச்சேதமும், இத்தனை உடைமைகள் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம், எதற்காக போலீஸ், எதற்காக போலீஸ் கையிலே தடி, எதற்காக போலீஸ் கையிலே துப்பாக்கி, எதற்காக முத்தம் கொடுக்கவா, இது என்ன அரசாங்கம்?’ என்று கூறியிருக்கிறார். 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது காலிகள் சேர்ந்து நடத்தக்கூடிய போராட்டம் என்று ஈ.வெ.ராமசாமி பெரியார் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
பெரியார் அப்படி சொல்லியிருப்பதை முதல்வர் ஸ்டாலின் ஒருவேளை படிக்கவில்லை என்றால், "இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும்" என்ற புத்தகத்தை வாங்கி பெரியார் இந்தி எதிர்ப்பு குறித்து என்ன பேசினார் என்பதை முதல்வர் ஸ்டாலின் பார்க்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெரியார் மீண்டும் சொல்கிறார்... ‘எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கு அல்ல... ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக. தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல... ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக. ஆங்கிலத்தை பொதுமொழியாக , அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழர்களின் வீட்டு மொழியாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.’ இதனை பெரியார் விடுதலை இதழில் 27.1.1969-ல் எழுதியிருக்கிறார்.
காரணம் பெரியார் சொன்னதை நிறைய மறந்துவிடுகின்றனர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒரு புதிய சரித்திரத்தை எழுதிவிட்டு, இதுதான் உண்மையென்று திமுக நம்மை நம்பவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை 1969-ல் பெரியாருக்கு வயதாகிவிட்டது, அதனால் தவறாக சொல்லியிருக்கக்கூடும் என்று நினைக்கலாம். அதே பெரியார் 1948 அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பேசிய பெரியார், ‘தமிழைவிட ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாக்கினால், அதற்கு நான் வாக்களிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால், திமுகவினர் எங்களுக்கு தமிழ் வேண்டாம், ஆங்கிலம்தான் வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கான காரணம் ரொம்ப சுலபமான காரணம், தமிழ் என்பது தெய்வீக மொழி. நம்முடைய மொழியில் மட்டும்தான் ஆண்டவன், இறைவன், இறையாண்மை, சனாதன தர்மம் என அனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய ஒரே மொழி தமிழ்தான். அவர்களுக்குத் தெரியும் தமிழ் மொழியை ஊக்குவித்தால், தமிழ் மண்ணிலே இறை நம்பிக்கையை ஊக்குவிக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும். கடவுள் நம்பிக்கையை மறுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், அதற்கு தமிழை மறுக்க வேண்டும். தமிழை இல்லை என்ற நிலைக்கு உள்ளாக்க வேண்டும். அதற்கு ஆங்கிலத்தை கொண்டுவரவேண்டும். இதை திமுக தனது ஆரம்ப கால அரசியலில் மிகத் தெளிவாக செய்து ஆங்கிலத்தை புகுத்த ஆரம்பித்தார்கள்.
தமிழ் தெரிந்தால், வீட்டில் இருக்கும் குழந்தைகளை காலையில் எழுந்தவுடன் திருவாசகம், தேவாரம், எட்டுத்தொகை, பத்துப்பபாட்டை படிக்க கூறியிருப்பார்கள். இதைப் படித்தால் தமிழும், இறை நம்பிக்கையும், இறை வழிபாடும், இது தமிழ் மண் என்பதும் காலங்காலத்துக்கு மக்களுக்கு தெரியும் என்ற காரணத்தால் மட்டும்தான் தமிழ் மொழியை சற்று இறக்கிவைத்துவிட்டு ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்து இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
நாம் பல பேர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பிறக்கவில்லை, அதனை பார்க்கவில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது திமுகவின் கோஷம்... Hindi Never English Ever. அதாவது இந்தி எப்போதும் வேண்டாம்; ஆங்கிலம் எப்போதும் வேண்டும். தமிழ் எப்போதும் வேண்டுமென்று அவர்கள் கேட்கவில்லை. இதைத்தான் திமுக திட்டமிட்டு, இறை நம்பிக்கையுள்ள தமிழை அகற்றிவிட்டு ஆங்கிலத்தைக் கொண்டுவந்தால், அரசியலில் உள்ளே வருவது சுலபமென்று கொண்டுவந்தது" என்று அவர் பேசினார்.