சென்னை: செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ரேடார் கருவி கொண்டு தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்பு வழங்கும் நடைமுறையை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சோதனை முறையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பகுதிகளில் குறுகிய நிலப்பரப்பில் அதிகளவில் மழைப் பொழிவு ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட அளவில் கொடுக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்புகளை குறுகிய நிலப்பரப்புக்கும் (தாலுகா ) கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சோதனை முறையில் தாலுகா அளவில் வானிலை முன்னறிப்புகளை வழங்க புதிய முயற்சி எடுத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் இயங்கக்கூடிய ரேடார் மூலமாக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களின் மீது மழை மேகம் உருவாகும் பொழுதும், உருவாகிய இடத்தில் இருந்து நகரும் பொழுதும் எந்த இடத்தில் மழை பொழிவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதை ஆய்வு செய்து தானியங்கி முறையில் முன்னறிவிப்புகளை ரேடார் கருவி நேரடியாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முன்னறிவிப்புகளை வெளியிடும் வகையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாலுகா அளவில் எந்த இடத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்பதனை மழை பெய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அல்லது மழை பெய்யும் பொழுது எத்தனை மணி நேரம் தொடரும் வாய்ப்பு உள்ளது என்பதை முன்னறிவிப்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முதற்கட்டமாக இந்த நான்கு மாவட்டங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரைவுப்படுத்தப்படும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.