தமிழகம்

வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக காத்திருக்கும் மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்ட மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

அடிப்படை வசதிகள் செய்து தருமாறு திமுகவினருக்கு வேண்டுகோள்

பெரம்பூர் இந்தியன் வங்கியில் வரிசையில் நின்ற மக்களை நேரில் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை மாற்றவும், டெபாசிட் செய்யவும் வங்கிகள், ஏடிஎம்-களில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் பல மணி நேரம் காத்திருந்து பணம் எடுக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் சென்னை பெரம்பூர் இந்தியன் வங்கிக்கு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அங்கு வரிசையில் காத்திருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அயனாவரம் காய்கறி, மீன் மார்க்கெட்டுக்குச் சென்ற அவர், வியாபாரிகளிடம் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். சில்லறை தட்டுப்பாடு காரணமாக தங்களின் வியாபாரம் பெருமளவில் முடங்கியுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

அயனாவரம் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகளை சந்தித்துப் பேசினேன். ரூ.500 வியாபாரம் செய்து வந்த ஒருவர், தற்போது ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே வியாபாரம் நடப்பதாகக் கூறினார். எல்லோரும் புதிய 2 ஆயிரம் நோட்டை எடுத்து வருவதாக வியாபாரிகள் அனைவரும் வேதனையோடு தெரிவித்தனர். வியாபாரத்தை விட்டுவிட்டு வங்கிகள், ஏடிஎம்-களில் நாள் முழுவதும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலை மாற மேலும் ஒரு வாரம் ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் ரூ.4 ஆயிரத்து 500 வரை பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றார்கள். தற்போது அதனை ரூ.2 ஆயிரமாக குறைத்துள்ளனர். இதனால் அரிசி, காய்கறிகள்கூட வாங்க முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவச் செலவுகளுக்கும் பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சொந்தப் பணத்தை மாற்ற மை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்தனர். மக்களின் இந்த துயரங்களை எல்லாம் நேரில் பார்த்து வேதனை அடைந்தேன்.

வங்கிகளில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பது, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள திமுகவினர் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஏனெனில் மக்களின் துயரங்களைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வரின் பொறுப்புகளைக் கவனித்து வரும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்பிரச்சினை குறித்து அறிக்கை கூட வெளியிடவில்லை. தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோரிடம் இருந்துகூட அறிக்கை வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

          
SCROLL FOR NEXT