சென்னை: தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, அக்.31-ம் தேதி பல்கலைக்கழகங்கள், கல்லூரிமாணவர்களைக் கொண்டு மாரத்தான், பைக் பேரணி உட்படபல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் அனைத்துபல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாளான அக்.31-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலும் அதுபோல பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அன்று காலை 7 முதல் 8 மணிவரை ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு மாவட்டத்துக்கு 100 மாரத்தான் என நாடு முழுவதும் 75 ஆயிரம் மாரத்தான் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
இதில் பங்கேற்பவர்கள் தங்களது செல்ஃபிகளை பதிவேற்ற, பிரத்யேக இணையதளம் உருவாக்க வேண்டும். என்எஸ்எஸ் உள்ளிட்ட மாணவர் குழுக்கள் மூலம் மிதிவண்டி, பைக் பேரணிகளை நடத்த வேண்டும். சர்தார் வல்லபபாய் படேலின் வாழ்க்கை வரலாறு குறித்து பட்டிமன்றம், விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும். அவரதுவாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களை அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.