கோவை: கோவையில் கார் வெடித்ததில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சல்கான்(28). இவர், உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். அப்சல்கானிடம் நேற்று முன்தினம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், நேற்றும் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த ஜமேஷா முபின், கார் விபத்து சம்பவம் தொடர்பாக ஏதாவது தகவல்களை முன்கூட்டியே தெரிவித்தாரா, அவருக்கு வெடி மருந்துகள் வாங்குவதற்கு உதவி செய்தவர்கள் பற்றி தெரியுமா, அவருடன் நெருக்கமான நட்பில் இருந்தவர்கள் யார் என்பன போன்ற தகவல்கள் குறித்து அப்சல்கானிடம் போலீஸார் கேட்டறிந்தனர்.
அவரது வீட்டில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தனிப்படை போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் வீட்டிலிருந்த லேப்டாப்பை கைப்பற்றிய போலீஸார் ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.