கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார். படம் : ஜெ.மனோகரன் 
தமிழகம்

காரில் சிலிண்டர் வெடித்த வழக்கு: கைதான 5 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்

செய்திப்பிரிவு

கோவை: கோவை கோட்டைமேட்டில் கார் வெடித்து உயிரிழந்த முபினின் நெருங்கிய கூட்டாளிகளான உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முபினின் வீட்டில் போலீஸார் சோதனை செய்து 75 கிலோ வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு, முபினின் வீட்டிலிருந்து அவரும், அவரது கூட்டாளிகளும் பெரிய மூட்டையை எடுத்துச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

முபின் மற்றும் கூட்டாளிகள் மூட்டையை பத்திரமாக எடுத்துச் செல்வதை வைத்துப் பார்க்கும்போது, அதில் டிரம்கள் இருந்திருக்கலாம் எனவும், அந்த டிரமின் உள்ளே வெடிமருந்துகளை பதுக்கி, காரில் ஏற்றுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், வெடிமருந்து உள்ளிட்டவற்றை முபின் மட்டும் தனியாக வாங்கியிருக்க முடியாது, அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோர் உதவியிருக்கலாம், வேறு இடங்களில் எங்காவது வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

போலீஸ் மனு: இதுகுறித்து விசாரிப்பதற்காக 5 பேரையும் காவலில் எடுக்க போலீஸார் முடிவு செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண் 5) முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 3 நாள்போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் அனுமதி அளித்தார். இதையடுத்து, அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT