தமிழகம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கிறது: ஒருசில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து மியான்மர் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 30-ம் தேதி தொடங்கிய நிலையில், சில நாட்கள் மட்டுமே தொடர்ந்து மழை பெய்தது. இதற்கிடையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறியதால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 250 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டிருந்தது. இது பின்னர் வலுப்பெற்று, திசை மாறி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கி நகர்ந்தது.

வலுவிழந்தது

இது தற்போது மியான்மர் அருகே உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து, மியான்மர் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 டிகிரி, 24 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

திருமானூரில் 3 செ.மீ.

கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் 3 செ.மீ., திருவாரூர் மாவட்டம் பாண்டவையாறு, பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், பாடாலூரில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

வெப்பநிலையைப் பொருத்த வரை, நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 37 டிகிரி, சேலத்தில் 36 டிகிரி, மதுரை, வேலூர், தருமபுரியில் 35 டிகிரி, சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது.

இவ்வாறு சென்னை வானிலை மைய அதி காரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT