தமிழகம்

கார் சிலிண்டர் வெடிப்பு | மெரினாவில் கைத்துப்பாக்கி எதிரொலி; சென்னையில் கண்காணிப்பு அதிகரிப்பு: தங்கும் விடுதிகளில் போலீஸ் தீவிர சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மெரினாவில் கைத்துப்பாக்கி பறிமுதல் எதிரொலியாக சென்னையில் போலீஸார் ரோந்துமற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர். கோவை உக்கடம் அருகே உள்ளகோட்டைமேடு வழியாக கடந்த 23-ம்தேதி அதிகாலை சென்ற கார், அங்குள்ள கோயில் முன்பு உள்ளவேகத்தடையைக் கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரை ஓட்டிச் சென்ற ஜமேஷா முபின் என்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே இறந்தார். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சமையல்எரிவாயு சிலிண்டர் வெடித்ததால்விபத்து நிகழ்ந்தாக கூறப்பட்டது.

இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். கார் வெடித்து சிதறிய இடத்திலிருந்து ஆணிகள், சிறிய அளவு இரும்பு குண்டுகள் உட்பட வெடிபொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மேலும் சில பொருட்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க நேற்று முன்தினம் காலை மெரினா கடற்கரையில், மணல் பரப்பில் கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த துப்பாக்கி அனுமதி பெறப்பட்ட துப்பாக்கியா அல்லது கள்ளத்துப்பாக்கியா? என மெரினா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்விரு சம்பவங்களைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தங்கும் விடுதிகள், பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் ரோந்து மற்றும்கண்காணிப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் குறித்ததகவல்கள் ஏதேனும் கிடைத்தால் அதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT