சென்னை: ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு பாமக இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கியிருப்பது பாமக.வினர்மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள கட்சி பாமக. சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் முதலில் பாமகவை கூட்டணியில் சேர்க்கவே திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். அந்த அளவுக்கு அக்கட்சி செல்வாக்கு பெற்றுள்ளது.
பாமக தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழகத்தில் அக்கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற ஆதங்கம் நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மத்தியில் இருந்துவருகிறது. எனவே, பாமகவை தமிழகம் முழுவதும் வலுப்படுத்தவும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாக மட்டுமே நீடிக்காமல், கூட்டணியை உருவாக்கி தலைமை தாங்கும் கட்சியாக மாற்றும் வகையில் பாமக.வை வலுவாக மாற்றஅனைத்து முயற்சிகளையும் அன்புமணி எடுத்து வருகிறார்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகங்களையும் அன்புமணி வகுத்து வருகிறார். இதற்காக, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
கட்சியினர் மத்தியில் சலசலப்பு
இந்நிலையில், கட்சியினர் யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பாக ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு கட்சியின் அதிமுக்கியம் வாய்ந்த இளைஞர் அணி தலைவர் பதவிவழங்கப்பட்டுள்ளது. கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன்தான் தமிழ்க்குமரன். இந்தநியமனத்தை ராமதாஸ் தன்னிச்சையாக செய்திருப்பதாக கூறப் படுகிறது. இந்த நியமனம் ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கி உள்ளதாகவும் தெரிகிறது. அதே போல், கட்சியின் எந்தப் பணியிலும் ஈடுபடாத தமிழ்க்குமரனை இப் பதவியில் நியமித்திருப்பது கட்சியினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘பாமகவில் இளைஞர் அணி தலைவர் பதவி முக்கியமானது. கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல கட்சித் தலைவர் என்ற முறையில் அன்புமணி பெரும் முயற்சி எடுத்து வருகிறார். குறிப்பாக, பாமக மீதுள்ள சாதிக் கட்சி என்ற அடையாளத்தை உடைத்து, அனைத்து சாதிகளுக்கான பொதுவான கட்சி பாமக என்ற நிலையை உருவாக்கவும், 2026-ல் ஆட்சியைப் பிடிக்க பாமக 2.0 என்ற செயல்திட்டத்தை வகுத்து புதிய வேகத்துடன் செயல்பட்டும் வருகிறார். தவறு செய்யும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்து கட்டுப்பாட்டை கொண்டு வருவதால், கட்சியினர் ஒருமுகமாக செயல்பட்டு வருகின்றனர்.
நிறுவன அதிகாரியாக இருப்பவர்
இந்த நேரத்தில் தமிழ்க்குமர னுக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை வழங்கியிருப்பது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அவர் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுநேர தலைமை அதிகாரியாக உள்ளார். அவர் எப்போதும் கட்சிநடவடிக்கைகளில் பங்கேற்றதில்லை. இனிமேலும் பங்கேற்க முடியாது. ஜி.கே.மணியின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக பதவி வழங்கியிருப்பது தவறானது. கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு அப்பதவியை வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
பாமகவின் இளைஞர் அணிதலைவராக இருந்த அன்புமணி, கடந்த மே மாதம் இறுதியில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கவுரவத் தலைவரானார். சட்டப்பேரவை பாமகதலைவராகவும் ஜி.கே.மணி உள்ளார்.
ஆனால், கட்சியில் கவுரவத்தலைவர் பதவி என்பது முக்கியத்துவம் இல்லாத பதவியாகவே இருப்பதாலும், ஆரம்ப காலத்தில்இருந்து கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததாலும், அவரது மகன்தமிழ்க்குமரனுக்கு கட்சியில் இளைஞர் அணி தலைவர் பதவியைராமதாஸ் கொடுத்திருக்கலாம் என்று சில முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.