சென்னை: கோவையில் நடந்துள்ள சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தற்கொலை தாக்குதலுக்கான முயற்சி. இந்த விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மூடி மறைக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஆராய தமிழகத்தில் கூடுதலாக என்ஐஏ அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை நேற்று கூறியதாவது: கோவை முற்றிலுமாக தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கொங்கு பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் முழுமையாக ஊடுருவியுள்ளது. விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் கடந்த 21-ம் தேதி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், ‘எனது இறப்பு செய்தி உங்களுக்கு தெரியவரும் நேரத்தில், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள். என் குற்றங்களை மறந்து விடுங்கள். எனது இறுதிச் சடங்கில் பங்கு கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இது தாக்குதலுக்கு முன்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம்.
கோவையில் 55 கிலோ அமோனியம், பொட்டாசியம், சோடியம் போன்ற ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 5 பேர் மீது எந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, விசாரணையில் உள்ள 8 பேர் குறித்து போலீஸார் ஏன் எதுவும் கூறவில்லை? இச்சம்பவம், தற்கொலை தாக்குதலுக்கான ஒரு முயற்சிதான். இதை கூற காவல் துறை தயங்குவது ஏன், யாரை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. நல்ல வேளையாக அந்த சம்பவம் நடைபெறவில்லை. அப்படி நடந்திருந்தால், ஆட்சி கலைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.
தமிழக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. மாநில உள்துறை அதிகாரிகள் செயலிழந்து உள்ளனர். அவர்களை மாற்றிவிட்டு, முந்தைய அதிமுக ஆட்சிகளில் இருந்ததுபோல நல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மூடி மறைக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஆராய தமிழகத்தில் கூடுதலாக என்ஐஏ அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். 2 நாட்களில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆளுநரை சந்திக்க உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.