சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மழைநீர் வடிகால்பணிகள் இரவு 10 மணிக்கு மேல்மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொதுப் பணித் துறைஅமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அயோத்திதாசர் மணிமண்டபம் அமைக்கும்பணி மற்றும் அண்ணல் அம்பேத்கர்மணி மண்டப மறுசீரமைப்புப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலுநேற்று ஆய்வு செய்தார். அப்போதுசெய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2021-22-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றுமுதல்வர் அறிவித்தார். தொடர்ந்து,4,786 சதுர அடி பரப்பளவில், ரூ.2.48கோடி மதிப்பீட்டில் அயோத்திதாசர் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும்என்று ஆணையிட்டார். அதன்படி இப்பணி கடந்த செப்.26-ம் தேதிதொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல்மாதம் இப்பணி நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் சிதிலமடைந்து இருந்ததால், மறுசீரமைக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, அம்பேத்கர் மணிமண்டபம் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடையும் நிலையில்உள்ளன. இதுதவிர, அம்பேத்கர்சிலை அமைக்க முதல்வர் உத்தரவிட்டதால், அப்பணியும் நடைபெறுகிறது. இது முதல்வரால் 27-ம் தேதி (நாளை) திறந்து வைக்கப்படும்.
வடகிழக்குப் பருவமழை சென்னையில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பெய்யக் கூடிய நிலை உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை பகலில் மேற்கொள்ள இயலவில்லை. ஆகையால், இரவு 10 மணிக்கு மேல் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளச்சேரி -பள்ளிக்கரணை சாலைவடிகால் பணிகள், நீர்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியபணிகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மதுரவாயல் உயர்மட்ட சாலை: சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்டச் சாலை, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின்போது, தொடங்கப்பட்டது. இத்திட்டம் 10 ஆண்டுகள் கிடப்பில்போடப்பட்டதால், ரூ.1,000 கோடியில் முடிக்க வேண்டிய இப்பாலத்தின் திட்டச் செலவு தற்போது ரூ.5,500 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மாநில அரசு இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை நான் ஆய்வு செய்வதைப்போல், தலைமைச் செயலர்இறையன்பும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது, பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.