தமிழகம்

கட்டிய தொகையை முழுமையாக எடுக்க முடியாதா?

செய்திப்பிரிவு

ஐநூறும்.. ஆயிரமும்..: உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி கே.சுந்தரேசன் தரும் பதில்கள் இங்கே..

வங்கிக் கணக்கில் எவ்வளவு எடுக்கலாம்?

நான் கூலித் தொழிலாளி. எனக்கு வங்கியில் ஜன் தன் கணக்கு உள்ளது. முதலில் 4,000 ரூபாய் மாற்றினேன். மறு படியும் என் கணக்கில் 8,000 ரூபாய் செலுத்தி பணம் எடுக்க முயன்றபோது ஜன் தன் கணக்கில் மாதம் ஒருமுறைதான் பரி மாற்றம் நடைபெறும் என்கிறார்கள். இதனை தெளிவுபடுத்த வேண்டும்.

- முகமது கமருதீன், மதுரை.

நீங்கள் முறையான கே.ஒய்.சி. ஆவணங்கள் கொடுத்து கணக்கு தொடங்காமல், 2 போட்டோக்களையும் பெயரையும் மட்டுமே கொடுத்து கணக்கு தொடங்கியவராக இருக்க வேண்டும். இப்படி கணக்கு தொடங்கினால் மாதத்தில் ஒரே ஒரு முறைதான் அதுவும் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்தான் எடுக்க முடியும்.

கடை இருப்பை மாற்றலாமா?

சிறிய துணிக்கடை நடத்தி வருகிறேன். வாடிக்கையாளர்களிடம் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை வாங்கி வங்கியில் இருப்பு வைத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாமா?

- சரவணன், காஞ்சிபுரம்.

நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு, செல்லாத நோட்டுகளை வாங்கக் கூடாது. அதற்கு முன்னதாக நீங்கள் அந்தப் பணத்தை வாங்கி இருந்தால் அதற்கான அத்தாட்சி ஆவணங்களைக் காட்ட வேண்டும்.

கூடுதலாக 2 லட்சம் செலுத்தலாமா?

நான் வங்கியில் ரூ.1.5 லட்சம் ஏற்கெனவே இருப்பு வைத்துள்ளேன். மறுபடியும் ரூ.2 லட்சம் செலுத்தலாமா?

- அய்யப்பன், திருப்பூர்

ஏற்கெனவே வங்கியில் உள்ள இருப்பானது வரி கட்டிய வருமானமாக இருந்தால் கூடு தலாக செலுத்தும் ரூ.2 லட்சத்துக்கு எந்தக் கேள்வியும் இருக்காது. அப்படி இல்லாமல், மொத்த பணமுமே வரி கட்டாத பணமாக இருந்தால் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டி கூடுதலாக வரும் ஒரு லட்சத்துக்கு கணக்கு சொல்ல வேண்டி இருக்கும். ஆசிரியராக இருக்கும் தனது மனைவியின் சேமிப்பு பணம் குறித்து கேட்டிருக்கும் மன்னார்குடி அகமதுமீரானுக்கும் இதே பதில்தான்.

விவசாய வருமானம் 10 லட்சத்துக்கு வரி வருமா?

நான் விவசாயி. என்னிடம் 10 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. ரூ.10 லட்சம் இருப்பு வைத்துள்ளேன். இதற்கு ஏதேனும் வரி செலுத்த வேண்டுமா? கையில் ரூ.2 லட்சம் உள்ளது. இதையும் வங்கியில் செலுத்த விரும்புகிறேன். என் பெயரிலும், மனைவி பெயரிலும் பிரித்து போடலாமா?

- கார்த்தி, கோயம்புத்தூர்.

உங்களது பழைய இருப்பு விவசாய வருமானமாக இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. ஆனால், உங்களுக்கு விவசாய வருமானம் மட்டும்தானா, இதைத் தவிர வேறு வருமானம் உண்டா, இல்லையா என்பதைப் பற்றி கேள்வியில் தெளிவு இல்லை. இந்தக் கேள்வியை வருமான வரித்துறையும் கேட்கும் என்பதால் நீங்கள் ஆடிட்டர் ஒருவரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம்.

காசோலைக்கு முழு பணமும் கிடைக்குமா?

அரசுப் பணியாளர் ஒருவரின் மூலம் எனக்கு காசோலை வந்துள்ளது. அதனை வங்கியில் மாற்றும்போது முழுத் தொகையும் கிடைத்துவிடுமா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாகதான் பணத்தை பெற முடியுமா?

- பெயர் குறிப்பிடாத வாசகர்.

அரசுப் பணியாளர் கொடுத்தாலும், அது சாதாரண கொடுக்கல் வாங்கல் பணம்தான். எனவே, அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தி அதில் இருந்து, இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள தொகையை (வாரம் ரூ.24 ஆயிரம்) மட்டுமே எடுக்க முடியும்.

கட்டிய தொகையை முழுமையாக எடுக்க முடியாதா?

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் முன்பாக மகள் திருமணத்துக்காக என் மனைவி, மகளிர் சுய உதவிக் குழுவில் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கினார். இப்போது அந்த பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டுவிட்டதால் அப்படியே வங்கியில் செலுத்தினேன். மீண்டும் அந்த பணத்தை எடுக்க முயற்சித்த போது முதலில் ரூ.10 ஆயிரம் கொடுத்தனர். பின்னர் ரூ.5000, ரூ.4500 கொடுத்தனர். மறுபடியும் பணம் கேட்டபோது 10 நாள் கழித்து வருமாறு கூறுகின்றனர். நான் என்ன செய்வது?

- பெயர் குறிப்பிடாத வாசகர், நாகப்பட்டினம்.

இப்போதுள்ள அறிவிப்பின்படி உங்களது கணக்கில் பணம் போட லிமிட் இல்லை. ஆனால், வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். நீங்கள் பணம் எடுத்த சமயம், இந்த லிமிட் வாரத்துக்கு 20 ஆயிரமாக இருந்திருக்கிறது. அதனால்தான் நீங்கள் 3 தவணைகளில் ரூ.19,500 எடுத்த தும் மறுபடியும் 10 நாள் கழித்து வரச் சொல்லி இருக்கிறார்கள். இப்போதுள்ள நடைமுறைப்படி இப்படித்தான் நீங்கள் பணத்தை எடுக்க முடியும்.

நகையை திருப்பினால் பிரச்சினை வருமா?

நான் வங்கியில் நகை அடகு வைத்துள்ளேன். அதைத் திருப்ப வேண்டுமெனில் வட்டியுடன் சேர்த்து ரூ.2.6 லட்சம் செலவாகும். தற்போது பணத்தைச் செலுத்தி அந்த நகையை திருப்பினால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா?

- ஜெயக்குமார், பெரம்பூர்.

ஒரு வங்கிக் கணக்கின் மூலம் சந்தேகத்துக்கு இடமான பணப் பரிமாற்றம் நிகழ்வதாக தெரியவந்தால் அதை வருமான வரி துறைக்கு தெரிவிக்க வேண்டும் என ஏற்கெனவே ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை இருக்கிறது. எனவே, நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தை உங்களது சேமிப்புக் கணக்கில் செலுத்தி அதன் வழியாக உங்களது நகையை மீட்பதே பாதுகாப்பான வழி.

கூடுதல் வருமானத்தை செலுத்தலாமா?

எனது விவசாய வருமானத்தில் கடந்த ஆண்டு ரூ.9 லட்சம் வங்கியில் செலுத்தி இருப்பு வைத்துள்ளேன். அதற்கான மாத வட்டியை மியூச்சுவல் ஃபண்டில் போடுகிறேன். ரூ.4 லட்சம் நகை ஈட்டு விவசாயக் கடன் உள்ளது. கூட்டுறவு வங்கியில் ரூ.2 லட்சம் கடன் உள்ளது. இப்போதுள்ள நிலையில், கூடுதலாக இந்த ஆண்டு எனக்கு கிடைத்த விவசாய வருமானம் ரூ.5 லட்சத்தையும் வங்கியில் செலுத்தினால் வருமான வரி கேட்பார்களா?

- மணிகண்டன், பொள்ளாச்சி.

விவசாய வருமானத்துக்கு வருமான வரி கேட்க மாட்டார்கள் என நினைக்கிறீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் வருமானத்துக்கு வருமான வரி பிடிக்கப்பட்டு விடும் என்பதால் அதைப்பற்றி கவலையில்லை. அதேசமயம், தனக்கு 4 லட்ச ரூபாய் கடன் இருப்பதையும் இப்போது கையில் உள்ள பணம் 5 லட்சமும் விவசாயத்தில் வந்ததுதான் என்பதற்கும் முறையான ஆவணங்கள் கொண்டு நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் வரும்.

கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வது?

பாங்க் ஆஃப் பரோடாவில், செல்லாத பணத்தை மாற்ற சென்றிருந்தேன். ஆனால் பணம் மாற்ற முடியாது. கணக்கில் இருப்பு வைத்துதான் எடுக்க முடியும் என தெரிவித்தனர். எனக்கு வங்கியில் கணக்கு கிடையாது. இதற்கு நான் என்ன செய்வது?

- அப்துல் ரகுமான்

கவலைப்பட வேண்டாம். உங்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய கே.ஒய்.சி. ஆவணங்களைக் கொடுத்து புதிதாக ஒரு வங்கிக் கணக்குத் தொடங்குங்கள். அதற்குப் பிறகு, உங்களிடம் உள்ள பணத்தை டிச.30-ம் தேதிக்குள் அந்த வங்கிக் கணக்கில் செலுத்தி, செல்லும் பணமாக்கிக் கொள்ளுங்கள்.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

நீங்கள் செய்யவேண்டியது... 044-42890012 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர்முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களைப் பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

SCROLL FOR NEXT