சூரிய கிரகணத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் கதவை மூடும் பணியாளர்கள். படம் ஆர்.வெங்கடேஷ் 
தமிழகம்

பகுதி சூரிய கிரகணம்: தஞ்சாவூர் பெரிய கோயில் மூடல்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: பகுதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் இன்று (அக்.25) நடை சாத்தப்பட்டு கோயில் மூடப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி, வராஹி அம்மன், கருவூரர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தும், அங்குள்ள கல்வெட்டுகள், சிற்பங்களை பார்த்து ரசித்தும் வந்தனர். இதையடுத்து சூரிய கிரணத்தால் கோயிலின் கதவு பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை சாத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே போல் கோயிலுக்குள் இருந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அனைவரையும் பகல் 12 மணிக்கு பிறகு, கோயில் பணியாளர்கள் வெளியேற்றி, கோயிலின் பிரதான வாயிலை மூடினர். இதனால் வெளியூரிலிருந்து பெரிய கோயிலுக்கு வந்தவர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் கவலை அடைந்து, மூடிய கோயிலை வெளியே இருந்து பார்த்துவிட்டு சென்றனர்.

SCROLL FOR NEXT