மதுரை விளக்குத்தூண் கீழமாசி பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பைகளை அகற்றிய மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரை நகரில் 1,000 டன் ‘தீபாவளி’ குப்பை: ஓய்வின்றி அகற்றும் தூய்மைப் பணியாளர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகரில் நேற்று தீபாவளி நாளில் 1,000 டன் குப்பைகள் சேர்ந்தன. அவற்றை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஒய்வில்லாமல் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினமும் 750 முதல் 800 டன் குப்பை தேங்கும். அதனை தூய்மைப் பணியாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்துவார்கள். தூய்மைப் பணியாளர்கள் வீடு, வீடாக சேகரிக்கும் குப்பை, பொது இடங்களில் சேகரிக்கும் குப்பைகளை குறிப்பிட்ட இடங்களில் குவித்து, அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாகனங்கள் மூலம் வெள்ளக்கல் குப்பை கிடக்கிற்கு கொண்டு போய் போடுவார்கள்.

சித்தரைத் திருவிழா, தீபாவளி, பொங்கல், ஆயுதப் பூஜை உள்ளிட்ட விழாக்களில் குப்பைகள் அதிகரிக்கும். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த 2 நாளாக மதுரை மாநகரில் 100 வார்டுகளிலும் வழக்கத்தைவிட குப்பை 250 டன் கூடுதலாக சேர்ந்தது. தீபாவளி நாளில் மட்டும் 1000 டன் குப்பை சேர்ந்தது. இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குப்பைகள் அகற்றும் பணி | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இது குறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: "தீபாவளியை விட ஆயுதப் பூஜை, பொங்கல் நேரங்களில்தான் குப்பை அதிகமாக சேரும். தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் குப்பைகள் மட்டுமே சேரும். வெடி வெடித்தப் பிறகு அதில் இருந்து சிதறும் பேப்பர், பட்டாசு மருந்துகள் மட்டுமே சிதறி கிடக்கும். அவை குறைவான எடையாகதான் இருக்கும். ஆனால், ஆயுத பூஜை, பொங்கல் நாளில் வாழைத் தண்டு, இலை, அழுகிய பழங்கள், பூஜைப் பொருட்டுகள் என பல வகை பொருட்கள் குப்பையாக சேரும்.

அதனால், வழக்கத்தைவிட 300 முதல் 350 டன் குப்பை அதிகமாகும். இந்த தீபாவளி நாளில் 1000 டன் குப்பை சேர்ந்துள்ளது. வழக்கமாக குப்பை சேகரிக்கும் பணி காலை 6 மணி முதல் 2 மணியோடு முடிந்துவிடும். ஆனால், இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய குப்பை அப்புறப்படுத்தும் பணி நாளை காலை 6 மணி வரை நீடிக்கும். தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஒய்வில்லாமல் குப்பை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT