விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வசதியாக, தமிழக கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் அதிமுக எம்.பி.க்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் பி. வேணுகோபால், ஏ.நவநீதகிருஷ் ணன் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நேற்று சந்தித்து, மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக ஜெய லலிதா பதவியேற்றதும், 16.74 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த ரூ.5,780 கோடியே 92 லட்சம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தார். இந்த ஆண்டு கர்நாடக மாநிலம் காவிரி தண்ணீரை திறக்காததால், மேட்டூர் அணை திறப்பு தள்ளிப் போனது. இதனால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, ரூ.64.30 கோடி மதிப்பி லான சம்பா சிறப்புத் தொகுப்பை அறிவித்து, அது செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால், தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் முடங்கின. செல்லாத நோட்டுகளை பெறக் கூடாது என்ற அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன. விவசாயிகளும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உட்பட கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 8-ம் தேதி வரை ரூ.2,141 கோடியே 67 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8 லட்சம் பேருக்கு கடன் வழங்க முடியாத நிலை உள்ளது. கடுமையான பணப் பற்றாக் குறையால் கிராமங்களில் நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் களை வாங்கியவர்கள் திருப்பிக் கட்ட முடியாமல் உள்ளனர். பயிர்க் காப்பீட்டுத் தொகையும் விவசாயி களால் கட்ட முடியவில்லை.
பணப் பற்றாக்குறையை விரைவில் சீரமைக்காவிட்டால், காப்பீட்டுத் திட்டத்திலும் பாதிப்பு ஏற்படும். எனவேதான், தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களை சார்ந்துள்ள விவசாயிகளுக்கு உதவ முன்னோடி சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. இதன்படி, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங் கும் வகையில், புதிய கணக்கு தொடங்கப்படுகிறது. விதை, உரம் வாங்குதல்,விவசாய இயந்திரங்கள் வாடகை, பயிர்க்காப்பீடு போன்ற வற்றுக்கு பயிர்க்கடன் கணக்கில் வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர கூட்டுறவு நிறுவனங்களில் போதுமான ரொக்கப்பணம் இருக்க வேண்டும். எனவே, மற்ற வங்கிகளைப் போல மத்திய கூட்டுறவு வங்கிகளும் வைப்புத்தொகைகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயி களுக்கு உதவும் வகையில், அவற்றுக்கு வாரம் ரூ.24 ஆயிரம் என்ற கட்டுப்பாடின்றி தொகை வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், திருப்பி செலுத்தும் போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு களின் பாதுகாப்பு விதிகள்படி பெற் றுக்கொள்ள அனுமதிக்க வேண் டும். மேலும் நவம்பர், டிசம்பர் மாதங் களில் பயிர்க்கடன் வழங்கு வதற்கு வசதியாக, கூட்டுறவு வங்கி களுக்கு ரூ.3 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள், கிராமப்புற ஏழை களை பாதுகாக்கும் வகையில் இந்தப் பிரச் சினையில் தாங்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.