அரசுப் பணியில் வனவியல் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறைக்கப்பட்டதை திரும்பப் பெற முதல்வர் ஜெயலலிதாவிடம் வலி யுறுத்துமாறு மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் எம்எல்ஏவிடம் கேட்டுக் கொண்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வனவியல் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
வனத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் வனவியல் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 25 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு கடந்த 11-ம் தேதி ஆணை பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு நூறு சதவீத இடஒதுக்கீடு மீண்டும் வழங்கக் கோரியும் செவ்வாய்க்கிழமை முதல் வனக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சரத்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடை பெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் ஞாயிற்றுக் கிழமை கோவை வந்தார்.
சரத்குமாரை, மேட்டுப் பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் விமான நிலையத்தில் சந்தித்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதை முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கி ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.