தமிழகம்

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் 

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி: புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக செய்திப் பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன் (வயது 24), நேற்று (அக்.22) இரவு சென்னை, ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று (அக்.23) பிற்பகல் முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். முத்துகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT