சென்னை: சென்னையில் நேற்று மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த விபத்தில், சிகிச்சைப் பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் (24) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள புதிய தலைமைமுறை நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் நேற்று (அக்.22) இரவு பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் ஜாபர்கான்பேட்டை அருகே மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறிவிழுந்தார்.
இரவு நேரம் என்பதால், பள்ளத்தில் விழுந்த முத்துகிருஷ்ணனை யாரும் கவனிக்கவில்லை. பள்ளத்தில் தவறி விழுந்த முத்துகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற காவலர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து கிடந்த முத்துகிருஷ்ணனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். பின்னர் முத்துகிருஷ்ணனின் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று அதிகாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முத்துகிருஷ்ணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் முத்துகிருஷ்ணன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மழைநீர் வடிகால் பள்ளத்தில் இளைஞர் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.