தமிழகம்

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்துக்கு லஞ்சமா? - முன்னாள் ஆளுநரின் கருத்தால் அதிமுகவுக்கு சிக்கல்

செய்திப்பிரிவு

தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து சண்டிகரில் நேற்று முன்தினம் அவர் பேசியபோது இதை தெரிவித்திருந்தார். ‘நான் தமிழகத்தில் ஆளுநராக பணியாற்றி உள்ளேன். அங்கு நிலைமை மிகவும் மோசம். தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நான் தமிழக ஆளுநராக இருந்தபோது சட்ட விதிகளின்படி 27 துணை வேந்தர்களை நியமனம் செய்தேன் என்று அவர் கூறியிருந்தார்.

பன்வாரிலால் புரோஹித்தின் இந்த கருத்துக்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்துக்கு பல கோடி ரூபாய் பணம் வாங்குகிறார்கள் என விழா ஒன்றில் பேசினார். அப்போதே அவரது கருத்துக்கு நான் மறுப்பு தெரிவித்ததுடன், விளக்கமும் அளித்தேன்.

துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும்போது, தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு உறுப்பினர்கள் இணைந்து தகுதியான 10 பேரின் பெயர் பட்டியலை தயார் செய்து ஆளுநர் பார்வைக்கு அனுப்புவர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் 3 பேரை மட்டும் ஆளுநர் தேர்வு செய்வார். அந்த 3 பேரிடமும் ஆளுநர் நேர்காணல் நடத்துவார். இவ்வாறு நடக்கும் நேர்காணல் நிகழ்வுக்கும் உயர் கல்வித் துறைக்கும் மற்றும் மாநில முதல்வருக்கும் எந்த தொடர்பும் இருக்காது.

இந்நிலையில், பன்வாரிலால் புரோஹித் இவ்வாறு பேசியிருப்பது ஏற்புடையது அல்ல. பஞ்சாப் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை என்ற வருத்தத்தில் அவர் தமிழகத்தின் மீது குறை கூறியிருக்கிறார். துணை வேந்தர் நியமனம் முழுக்க, முழுக்க ஆளுநரை சார்ந்தது என்பதால் அதில் தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அதற்கு அவரே முழு பொறுப்பு. இந்த பதவிக்காக பணம் கைமாறியிருந்தாலும் அது ஆளுநரையே சாரும்.

ஆளும் அரசு, முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை. துணை வேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என்றும் அவர் கூறுகிறார். இதன்மூலம், துணைவேந்தர் நியமனத்தில் அரசின் தலையீடு இல்லை என்பது தெளிவாகிறது. தற்போது அவர் கூறியிருப்பது தவறான தகவல். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஊழல் குற்றச்சாட்டை, தமிழக அரசு விரிவாக விசாரிக்க வேண்டும். இதில், தவறுகள் நேர்ந்திருப்பதை உறுதி செய்து, ஊழல், முறைகேடுகள் மூலம் துணைவேந்தர் பதவியில் அமர்ந்துள்ளவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும், ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இதுகுறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதிமுக அரசில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் ஆளுநர் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டும், முக்கிய கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதும், அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT