தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களை வேலைக்காக மியான்மர், தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிலர் ஏமாற்றுவதாக ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை, சிலர் மியான்மர், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாக தெரிகிறது.
இதனால் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இவை தெரியாவிட்டால் தமிழக அரசை அல்லது சம்பந்தப் பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு பணியில் சேர உள்ள நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்திய தூதரக இணையதளங்களில் வெளியிடப் பட்டுள்ள அறிவுரைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். விவரங்களுக்கு 96000 23645, 87602 48625, 044 -28515288 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.