தமிழகம்

அணுசக்தி துறையில் மாணவர்கள் சாதிக்க வேண்டும்: ரஷ்ய துணை தூதர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: அணுசக்தி துறையில் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்று ரஷ்ய துணைத்தூதர் ஓலெக் அவ்தேவ் அறிவுறுத்தி உள்ளார். அறிவியல் தொழில்நுட்ப துறைகளைத்தேர்ந்தெடுத்து படிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்டும் வகையில், சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் சார்பில் ’ப்ரெசிஸ் எனர்ஜி ஒலிம்பியாட்’ போட்டி நடைபெற்றது. இப்போட்டி கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்ப துறைகளைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்டது.

ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் நேற்று வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரஷ்ய கூட்டமைப்பின் தென்இந்திய துணைத் தூதர் ஓலெக் அவ்தேவ் பரிசுகளை வழங்கினார். ஜெஎஸ்சி அணுக்கரு ஏற்றுமதி தகவல்தொடர்புத் துறை தலைவர் நினா டிமென்சோவா, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள், ரோசாட்டம் தென்ஆசிய மார்க்கெட்டிங் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மேலாளர் க்சேனியா எல்கினா, அணு இயற்பியல் மற்றும் பொறியியல் துறை துணைத் தலைவர் அலெக்சாண்டர் வி.நகாபோவ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், ரஷ்ய கூட்டமைப்பின் தென்இந்திய துணைத் தூதர் ஓலெக் அவ்தேவ் பேசும்போது, ‘இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் எதிர்கால சிறந்த விஞ்ஞானிகளை உருவாக்குவதுதான். இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. அந்தவகையில் இந்திய மொழிகளோடு ஒப்பிடும்போது, சுலபமாக ரஷ்ய மொழியை கற்றுக்கொள்ளலாம். மனிதனின் எதிர்கால வாழ்க்கை அணு ஆற்றலை நம்பித்தான் இருக்கும். எனவே, மாணவர்கள் அணுசக்தி துறைகளில் நிபுணத்துவம் பெறும் வகையில் தங்களது அறிவை வளர்த்து சாதிக்க வேண்டும். இதற்கு, அதற்கேற்ற அறிவியல் தொழில்நுட்ப துறைகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT